Tamilnadu

மழை வெள்ளத்தில் சிக்கிய நபர் : War Roomக்கு வந்த தகவல் - உடனே களத்தில் இறங்கிய தி.மு.கவினர்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.கவினர் மற்றும் இளைஞர்கள் என பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி விமான நிலையம் அருகே மழை வெள்ளத்தில் சிக்கிய நபரை கயிறு கட்டி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கதிரவன் மற்றும் அணி நிர்வாகிகள் காப்பாற்றியுள்ளனர். இப்படி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் இயங்கும் War Room வாயிலாக சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணக் கோரிக்கைகளை கவனித்து அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 550 வீரர்கள் - 6 ஹெலிகாப்டர்கள் : தென் மாவட்டங்களில் துரிதமாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்!