Tamilnadu

எல்லோருக்கும் ரூ.6000 கிடைக்கும் - மக்கள் அச்சப்பட வேண்டாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். எந்த ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மக்கள் அச்சப்பட தேவை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நிவாரணத் தொகைக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

சென்னையில் 1785 கடைகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 850 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 கடைகளிலும் காஞ்சிபுரத்தில் 135 கடைகளிலும் என மொத்தம் 2850 கடைகளில் இந்த டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிலர் சமூகவலைதளங்களில் நிவாரணத் தொகை குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். ரேஷன் அட்டைகள் மூன்று விதமாக உள்ளது. அரிசி குடும்ப அட்டை, சக்கரை குடும்ப அட்டை, வெள்ளை அட்டை உள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு 100% நிவாரண தொகை வழங்கப்படும்.

சக்கரை அட்டை தாரர்களுக்கு பாதிப்புகேற்ற அளவிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு உள்ளதோ அங்கு பாதிக்கபட்ட மக்கள் அனைவருக்கும் இந்த நிவாரண தொகை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் சென்னையில் 16 வட்டங்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம் கடையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Also Read: “பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் முன்மாதிரி; தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளார்கள்”: முதலமைச்சர் நேர்காணல்!