Tamilnadu
தமிழ்நாட்டில் ஆழப்படுத்தப்படும் 2300 ஏரிகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!
மழைக் காலங்களில் மழை நீர் அண்டை மாநிலங்களுக்கு பாய்வதையும், வீணாக கடலில் கலப்பதையும் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏரி, கால்வாய்களை ஆழப்படுத்தவும், உரிய இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஜி.தேவராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி மண்டல, மாவட்ட மாநில அளவிலான குழுக்களை அமைத்து 2022 பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த ஜூன் மாத புள்ளிவிவர கணக்கின்படி, 20 ஆயிரத்து 150 ஆக்கிரமிப்புகளை அகற்றி 7 ஆயிரத்து 569 ஏரிகளை ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை மீறப்படும்பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நீர்நிலைகள் பழுதுபார்த்து, புதுப்பித்து மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுதும் 2 ஆயிரத்து 300 ஏரிகளை உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் எந்த பகுதியில் தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோருகிறார் என குறிப்பிட்டு தெரிவிக்காத நிலையில், பொதுவான உத்தரவாக பிறப்பிக்க முடியாது என தெரிவித்ததுடன், ஒருவேளை குறிப்பிட்டு சொல்லும்பட்சத்தில் அது பரிசீலிக்கப்படும் என கூறி, தேவராஜன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
Also Read
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!
-
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
-
“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
-
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6% அசுர வளர்ச்சி! : முழு விவரம் உள்ளே!
-
பிளாக்மெயில் செய்வதும்தான் உங்களது வேலையா? : தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!