Tamilnadu

முதலமைச்சர் காப்பீடு திட்டம் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை... எடப்பாடி அரசு மருத்துவர்கள் சாதனை !

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது எடப்பாடி அரசு மருத்துவமனையில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடப்பாண்டில் மட்டும் 65 பேருக்கு வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளனர் அரசு மருத்துவர்கள். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையை கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தியது.

அதில் இருந்து அரசு மருத்துவர்கள் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு பெரும் பயன் இருக்கிறது. இந்த சூழலில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையில் நடப்பு ஆண்டில் மட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்முறையாக ஒருவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். தற்போது கோமதி என்கிற பெண்ணிற்கு இரண்டு கால்களுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தும், முனியன் என்பவருக்கு முதன்முதலாக இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து சாதனை புரிந்தமைக்கு அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிகழ்வு தொடர்பாக எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கோகுல்கிருஷ்ணன் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் பாலாஜி ஆகியோர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக எடப்பாடி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், எடப்பாடி மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் வருகை புரிந்த நோயாளிகள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் 65 நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து செய்து வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்த மருத்துவர்கள், இதன் மூலம் மக்கள் பலரும் பயனடைந்து வருவதாக கூறினர். தற்போது அரசு மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.