Tamilnadu

தந்தை வாங்கிய கடனுக்காக கடத்தப்பட்ட மகன்.. 12 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் : பாஜக பிரமுகர் அதிரடி கைது !

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (45). இவர் தனியாக தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தில் பாண்டிசேரியைச் சேர்ந்த சேகர் (42) என்பவர் இயக்குநராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இயக்குநராக பணிபுரிந்து வந்த சேகர், பாண்டிச்சேரி பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில் சேகரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் ஞானப்பிரகாசம், சுமார் ரூ.5 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் அழைக்கழித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மிகுந்த கொபத்தில் இருந்த சேகர், நேற்று மாலை மணப்பாறைக்கு வெள்ளைநிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்துள்ளார். அப்போது கடையில் ஞானப்பிரகாசத்தின் மகன் எபினேசன் (22) என்பவர் மட்டுமே இருந்துள்ளார். எனவே பணத்திற்காக அந்த இளைஞரை கடத்தி சென்றுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

பாஜக பிரமுகர்

குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞர் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இளைஞரை மீட்கும் பணியில் போலீசார் முனைப்பு காட்டினர். தொடர்ந்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படையினர் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த இளைஞர் கடத்தப்பட்ட இடம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த போலீசார், இளைஞரை பத்திரமாக மீட்டதுடன் கடத்திய நபர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாஜக நிர்வாகி சேகரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை வாங்கிய கடனுக்காக மகனை பாஜக பிரமுகர் கடத்திய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிமுக அரசு பேரிடர்களை கையாண்ட லட்சணம் இதுதான்: பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!