Tamilnadu
மிக்ஜாம் புயல் - தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP வலியுறுத்தல்!
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் நேற்று காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் நேற்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.5060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உணவு மற்றும் நிவாரண பொருட்கள் படகுகளில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக புயல் பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ஒன்றிய குழுவை உடனே அனுப்பிப் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும்." வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!