Tamilnadu

“மக்களைப் பாதுகாக்க முதலமைச்சர் இரவு முழுவதும் தூங்காமல் செயல்படுகிறார்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

சென்னை மாநகர மக்களை பாதுகாக்க முதலமைச்சர் இரவு முழுவதும் உறங்காமல் செயல்படுகிறார்" என்று இந்து - சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் வட சென்னையில் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் உத்தரவின்படி, வடசென்னை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (30.11.2023) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு வடசென்னையை பொறுத்தளவில் மண்டலம்-3,4,5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை மழை நீர் வடிகால் அமைப்பு பணிக்காக சுமார் ரூ.2,450 கோடி ரூபாய் செலவில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னையினுடைய சாலை நீளம் சுமார் 5,500 கிலோ மீட்டராக இருந்தாலும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சென்னையைச் சுற்றியுள்ள பழைய கால்வாய்களில் தண்ணீர் அதிக கொள்ளளவு வெளியேறும் வகையில் அகலப்படுத்தியும், புதிய கால்வாய்களை ஏற்படுத்திய வகையிலும் சுமார் 1,450 கோடி ரூபாய் இன்றைக்கு செலவிடப்பட்டுள்ளது.

வடசென்னையில் தண்ணீர் தேங்காத நிலை!

வடசென்னையில் இருக்கின்ற முக்கிய கால்வாய்களான கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கொடுங்கையூர் இணைப்பு கால்வாய். ஓட்டேரி நல்லா, கூவம் போன்ற ஆறுகளை தொடர்ந்து நீர்வளத்துறை மூலமாக ஆகாயத்தாமரை மற்றும் செடிகளை அகற்றுகின்ற பணி தொடர்ந்து மேற்கொண்ட காரணத்தினால் 60 ஆண்டு காலமாக பிரகாசம் சாலை, என். எஸ். சி போஸ் ரோடு, வால்டாக்ஸ் சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு போன்ற பல சாலைகளில் இன்றைக்கு 15 சென்டிமீட்டர் மழை பெய்தும் கூட ஒரு சிறு அளவு கூட தண்ணீர் தேங்காத நிலை காணப்பட்டது.

முதல்வரின் போர்க்கால நடவடிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் இன்றைய தின ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் இருக்கின்ற தண்ணீரை அகற்றுதல் தடையில்லாத மின்சாரத்தை வழங்குதல், அப்பகுதிக்கு தேவையான உணவினை வழங்குதல் போன்ற அத்தியாவசிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கின்றார். இந்த மழையினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற இடங்களை கண்டறிந்து அலுவலர்கள் முகாமிட்டு எவ்விதமான நோய் தொற்றும் வராமல் இருப்பதற்கு மருத்துவ முகாம்களை நடத்திடவும் அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிடவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திட உத்தரவிட்டிருக்கின்றார்.

ஆகவே இந்த பருவமழை வரும் நாட்களில் இன்னும் கனமழையாக கூடும் என்ற வானிலை அறிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீர் தேங்கியிருக்கின்ற தாழ்வான பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் அரசுத்துறை அலுவலர்கள் ஒருபுறம் பணியாற்றினாலும், மக்கள் பிரதிநிதி களான அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருபுறமும்,திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த நிர்வாகி கள் மறுபுறமும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

எப்படிப்பட்ட பெருமழைவந்தாலும் சமாளிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி தயாராக இருக்கின்றது. அளப்பறிய பணியை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் இரவும் முழுவதும் உறங்காமல் அவருக்கு வருகின்ற செய்திகள், தொலைக்காட்சிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்ற பகுதிகள் என்று குறிப்பிடும் இடங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும், என்னையும், மேயர் அவர்களையும் சென்று பார்வையிடச் சொல்லி இயக்கிக் கொண்டே இருந்தார். நேற்று இரவு யாருமே தூங்காமல் பணி செய்துள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் கடந்த 30.12.2021 அன்று சென்னை மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட வருகை தந்த போது இடுப்பு அளவிற்கு தண்ணீர் நின்ற பகுதிகளில் கூட நேற்றைக்கு பெய்த கன மழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் தான். ஆகவே சென்னை மாநகர மக்களை காப்பதில் நமது முதலமைச்சர் அவர்கள் அதிக அக்கறையோடு செயல்படுகிறார்கள். நாங்களும், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மழைப் பாதிப்பிலிருந்து மக்களை முழுவதுமாக பாதுகாப்போம் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டியளித்தார்.

Also Read: ”எவ்வளவு பெரிய கன மழையை எதிர்கொள்ளவும் சென்னை தயார்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!