Tamilnadu

மூளைச்சாவடைந்த தமிழ்நாடு செவிலியர் : உடல் உறுப்பு தானம் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வளித்து நெகிழ்ச்சி !

கன்னியாகுமரி மாவட்டம், கீழ்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் சேகர் (36). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவி இருக்கும் நிலையில், இருவரும் செவியிலியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி செல்வினுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான செல்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே அவரை பரிசோதித்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) மூளைச்சாவடைந்தார். இதைத்தொடர்ந்து தனது கணவரின் உடல் உறுப்புகளை மனைவி கீதா தானம் செய்ய முன்வந்துள்ளார்.

அதன்படி கேரள மாநில அரசின் K Soto என்ற இணையதளம் மூலம் செல்வினின் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைத்து தானம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, செல்வினின் இதயம், சிறுநீரகம், கணையம் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து அதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டது. நேற்று இரவு சுமார் 10:20 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து செல்வினின் உடல் உறுப்புகளுடன் கொச்சிக்கு அரசு ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹெலிகாப்டர் 11.12 மணிக்கு கொச்சியை வந்தடைந்தது. உடல் உறுப்புகள் அடங்கிய பெட்டிகளை ஹெலிகாப்டரில் இருந்து எடுத்த குழுவினர் அறுவை சிகிச்சைகள் நடைபெறும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

செல்வினின் கண்கள், திருவனந்தபுரம் கண் மருத்துவமனையில் இரு நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. லிசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயதான ஹரிநாராயணனுக்கு அவரது இதயம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. கிம்ஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், ஆஸ்டர் மெடிசியில் ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும் கணையமும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜும் பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ்நாடு அரசும் உடல் உறுப்பு தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளம் மருத்துவர் திடீர் உயிரிழப்பு : ஸ்டெராய்டு தான் காரணமா ?