Tamilnadu

”அண்ணாமலை IPS படித்தற்குக் காரணமே பெரியார், அண்ணாதான்” : அமைச்சர் பொன்முடி பதிலடி

விழுப்புரம் தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரிசுகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, " முத்தமிழறிஞர் கலைஞர் 13 வயதிலேயே கலை, இலக்கியம், பகுத்தறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இளம் வயதிலேயே 'மாணவ நேசன்' என்ற பத்திரிக்கையை நடத்தினார். மாணவர்களாகி நீங்கள் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " ஸ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறுகிறார். இந்த கருத்து ஏற்புடையது அல்ல. அண்ணாமலை IPS படித்ததற்குக் காரணமே தந்தை பெரியாரும், அண்ணாவும்தான் என்பதை உணர வேண்டும்.

ஏதோ பேச வேண்டும், பத்திரிகைகளில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார். பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் அழைப்பிதழ்களில் உயர் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரின் பெயர்களைப் புறக்கணிப்பது சரியானது அல்ல. இது கண்டனத்திற்குரிய செயல் "என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அமலுக்கு வரும்..”: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!