Tamilnadu

“ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் 22 குழந்தைகளை இழந்துள்ளோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம் !

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலில் "நீட் விலக்கு நம் இலக்கு" கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நீட்டுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தொடர்ந்து மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை பின்வருமாறு :

"நீட் தேர்வால் 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 குழந்தைகளை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நம் இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் நாம் அறிவித்துள்ளோம். இதற்கான முழுமையான மற்றும் உண்மையான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தற்போது குடியரசு தலைவரின் கையெழுத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் குடியரசு தலைவர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் நீட் தேர்வினை ரத்து செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வு தனிப்பட்ட திமுகவின் பிரச்னை இல்லை. இது மாணவர்களின் மருத்துவக் கல்வி பிரச்னை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்று நுழைவு தேர்வினை முதல் முறையாக ரத்து செய்தார். ஆனால் மீண்டும் நீட் எனும் நுழைவு தேர்வினை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு அதிமுக அரசும் துணை போனது.

அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி இந்த நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் அனைத்து இயக்கமும் இணைந்து எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வு உண்மையாக ரத்து செய்யப்படும் வரை போராடுவோம். இது நம் மாநில உரிமை. மாணவர்களின் கல்வி உரிமை."

Also Read: INDANE சமையல் எரிவாயு பதிவு சேவையில் நிறுத்தப்பட்ட தமிழ் : இந்தி மட்டுமே இடம்பெற்றதால் அதிர்ச்சி !