Tamilnadu
விபத்தில் சிக்கிய நேபாள குடும்பம் : திணறிய குடும்பத்துக்கு உதவி செய்த பெரம்பலூர் தோழர்கள் !
மந்திர மூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் 'அயோத்தி'. சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. மத வேறுபாடு, மனிதம் ஆகியவற்றை பற்றி பேசும் இந்த படம், திரையரங்குகளில் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும், மக்கள் மனதில் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் கதையானது, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து இருந்து தமிழ்நாடு இராமேஸ்வரத்தின் கோயிலுக்கு ஒரு குடும்பம் வருகிறது. இதில் அந்த குடும்ப தலைவர் (பல்ராம்) மிகவும் ஆணாதிக்கம், ஆன்மீகம் உள்ளிட்டவைகளை கண்மூடித்தனமாக நம்புகிறவராக இருக்கிறார். இவருக்கு மனைவி (ஜானகி), ஒரு சிறிய மகன் மற்றும் கல்லூரி படிக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
இந்த குடும்பம் வழிபடுவதற்காக இராமேஸ்வரம் செல்ல மதுரை வருகிறது. பின்னர் மதுரையில் இருந்து அதிகாலைக்குள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால், இவர்கள் காரில் பயணம் செய்கின்றனர். அந்த சமயத்தில் பல்ராம் சில எரிச்சல்களை கிளப்பவே, கார் ஓட்டுநருக்கு அவருக்கும் காருக்குள் வைத்தே தகராறு ஏற்படுகிறது. இதில், கார் நிலைத்தடுமாறி பெரிய விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் பல்ராமின் மனைவி ஜானகி உயிரிழந்து விடுகிறார்.
தொடர்ந்து மொழி தெரியாத ஊரில் இருந்து தனது ஊருக்கு அந்த குடும்பம் ஜானகியின் உடலை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறது. இதில் என்ன சிக்கல் இருக்கிறது, எப்படி அவர்கள் ஊருக்கு எடுத்து செல்கிறார்கள் என்பதே கதை. இந்த குடும்பத்துக்கு உதவியாக அந்த கார் ஓட்டுநரின் நண்பரான சசிகுமார் வருகிறார்.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த சசிகுமார் (அப்துல் மாலிக்), இந்து குடும்பமான பல்ராம் குடும்பத்துக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லமால் உதவி செய்கிறார். அவரோடு அவரது நண்பர்களும் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து விமானம் மூலம் ஜானகியின் உடலை அனுப்பி வைக்கிறார்கள். அவரது இறந்த உடலை அனுப்பி வைக்க பல சிக்கல்கள் இருக்கும். அதனையும் தீர்த்து வைத்து பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.
இந்த படம் மதத்தை தாண்டி மனிதமே அனைத்திலும் பெரிது என்பதை உணர வைக்கிறது. இந்த படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு உண்மை கதை என்று வரும். தற்போது இதே போல் தமிழ்நாட்டில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் மொழி தெரியாமல் திணறி போன சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் 36 பேர் பேருந்து மூலம் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணம் செய்துள்ளனர். அப்போது கடந்த 18-10-2023 இரவு 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மான் டுட்டியா தேவி என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
மொழி தெரியாத ஊரில் அவர்கள் திணறி அழுது, அலைந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த வழியாக 19-10-2023 அன்று அதிகாலை 5 மணிக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவில் அரிவாள் சுத்தியல் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டதும் அங்கிருந்த சிலர் அந்த ஆட்டோவை நோக்கி வந்து அரிவாள் சுத்தியல் சின்னத்தை தொட்டு அழுதனர்.
இதனால் திகைத்து போன அந்த ஆட்டோ ஓட்டுநர், அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் இவருக்கு இந்தி தெரியும் என்பதால் அவர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அப்போது அவர்கள், நடந்த சம்பவத்தை விவரித்துள்ளனர். அதோடு தாங்கள் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் என்றும் கூறி அழுத்துள்ளனர்.
இதையடுத்து தானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சங்கமான CITU-ன் நிர்வாகி பிரகாஷ் என்று கூறி, தாங்கள் உதவி செய்வதாக கூறி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரும் CITU நிர்வாகியான பிரகாஷ், சி.பி.எம் கட்சியின் சக தோழர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் நேரில் சென்று பார்த்து விவரத்தை கேட்டு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் சக தோழர்களும் சேர்ந்து பாடாலூர் காவல் நிலையத்திலும், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் உதவி செய்து இறுதி சடங்கிற்கு நிதி உதவி செய்து எரிவாயு தகனம் மேடையில் தகனம் செய்யப்பட்டது. மொழி தெரியாத ஒரு ஊரில் திகைத்து கொண்டிருந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எங்கே சென்றாலும், மதம், இனம், மொழி என அனைத்தையும் தாண்டி மனிதம் தான் முக்கியம் என்று அயோத்தி படம் உணர்த்தியதுபோல், தற்போது இந்த நிகழ்வும் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. இது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!