Tamilnadu

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : மகளிருக்கு மீண்டும் வாய்ப்பு- மகிழ்ச்சியான தகவல் சொன்ன அமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு 2வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" குறித்த கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, நிபந்தனைகளை தளர்த்தியதால் மாற்றுத்திறனாளிகளூக்கான உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும், முதியோர் உதவித்தொகை பெறும் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும் கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

பொதுவாக எந்த திட்டத்திலும், திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை இருக்காது. ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகுதியான மகளிரும் உரிமைத் தொகை பெறுவதில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தின் பயனை பெறலாம் என்ற நிலையை நம்முடைய அரசு உருவாக்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்து, நவம்பர் 30ஆம் தேதிக்குள் உரிய தீர்வை அளிப்பார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

கலைஞர் மகளிர் திட்டத்தின் வெற்றி என்பது, தமிழ்நாட்டு மகளிரின் வெற்றியாகும். இதனை உறுதிபடுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுக்கிறேன். இந்த திட்டத்தின் பயனாளிகளாக தகுதியுடையவர்கள் யார் யார் என அரசு எடுத்துக்கூறியதும், தமிழ்நாட்டின் மொத்த குடும்ப அட்டைதாரர்களில் 67 லட்சம் பேர், தாங்களாகவே புரிந்துகொண்டு விண்ணப்பம் எதுவும் அளிக்கவில்லை. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “சிறுபான்மை மக்கள் மீது அ.தி.மு.க.வுக்கு ஏன் திடீர் பாசம்?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரை !