Tamilnadu

“பெண்களுக்கான கல்வியில் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது..” - அமைச்சர் பொன்முடி பேட்டி !

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த ஒப்பந்த நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பிரான்ஸ் நாட்டு இந்திய தூதரகர்கள், பிரிட்டிஷ் நாட்டு இந்திய தூதர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரான்ஸ் நாட்டில் உயர் கல்வி பயில்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கான கல்வி முதல் அவர்களின் வளர்ச்சி வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், "இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் கண்டிப்பாக வளரும். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர். இந்த ஒப்பந்தமானது உலக நாடுகள் மத்தியில் கல்வி மட்டுமின்றி நாடுகளின் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கக் கூடிய ஒன்று. மேலும் இதன் மூலமாக கல்வியின் தரமும் உயர்த்தப்படும்.

தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் பிரான்ஸ் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் பல்வேறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்று. அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' என்கின்ற திட்டங்கள் மூலம் உயர்கல்வி படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிற நாடுகளை சேர்ந்த தூதர்கள் இங்கு வருகை புரிவது கண்டிப்பாக தமிழகத்தின் கல்வி தரத்தையும் வருங்காலத்தையும் உயர்த்தும் என்பதில் எந்த ஒரு கேள்வியும் இல்லை. பெண்களுக்கான கல்வியில் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கான கல்வி முதல் அவர்களின் வளர்ச்சி வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உயர் கல்வி பெறக்கூடிய பெண்களுக்கு ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை விட கல்வியின் தரத்தை உயர்த்திவதிலேயே அதிக நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பல்வேறு திட்டங்கள் வரையறுக்கப்பட்டு கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கல்வித்தரம் உயர்த்தப்படும்.

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான வெளியீடுகள் கூடிய விரைவில் வெளியிடப்படும். அதேபோல் முதலீட்டாளர்கள் மாநாடு பொறுத்தவரையில் தமிழக முதலமைச்சரின் சார்பில் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன் திட்டம்' உட்பட பல்வேறு திட்டங்களின் சாராம்சம் சார்ந்து மாநாட்டில் கல்வி தொழில் உட்பட பல்வேறு பிரிவுகள் மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தப்பட உள்ளது." என்றார்.

Also Read: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது..” - ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சியில் புதுவை மக்கள் !