Tamilnadu

“எனக்கு ஏன் வங்கிகள் கடன் கொடுக்கவில்லை” - சாமானியனின் கேள்வியால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் !

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் 90 ஆயிரம் பேருக்கு ரூ.3,479 கோடி வங்கிக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது நிர்மலா சீதாராமன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, தனக்கு தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என்று சதீஷ் என்ற நபர் ஒருவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

சதீஷ், கீழே இருந்து இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். மேலும் தான் ஏற்கனவே இதுகுறித்து பிரதமர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அரசு கடன் உதவி வழங்கும் என கூறிய நிலையில் தனக்கு ஏன் கடன் தரவில்லை என கேட்க வந்ததாகவும் தெரிவித்து கொண்டிருந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி, ஞாயம் கேட்க வந்த சதீஷை மேடைக்கு பின்புறம் அழைத்து செல்ல முற்பட்டார். இதனை தொடர்ந்து அந்த நபரை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேடைக்கு வரச்சொல்லி அழைத்தார். மேலும் அவருக்கு எந்த வங்கி கடன் கொடுக்கவில்லை என்று சொன்னால், தானே அவர்களிடம் பேசுவதாகவும், வாங்கி கொடுக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் மேடைக்கு வந்து பேசினார். அப்போது பேசிய அவர், "எனது பெயர் சதீஷ். நான் பிறந்து வளர்ந்து எல்லாம் கோவையில்தான். 2004-ம் ஆண்டு முதல் நான் வியாபாரம் செய்து வருகிறேன். லாக்டவுனில் எனது அலுவலகத்தில் உள்ள பணம் செலவாகிவிட்டது. எனவே நான் வங்கியை அணுகினேன். ஆனால் தற்போது வரை எனக்கு கடன் வழங்கப்படவில்லை.

இங்கு ஆகஸ்ட்டில் வந்தவர்களுக்கு செப்டம்பரில் பணம் தருவதாக கூறுகிறார்கள். கொலட்ரல் தருகிறேன் என்கிறார்கள் ஆனால் அதை தர மறுக்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மை என்றால் எனக்கு எப்போது கடன் தருவீர்கள் என முதலில் சொல்லுங்கள். கடன் கொடுக்க முடியாது என்றால், காரணத்தை சொல்லுங்கள். கொடுக்கிறோம் என்றால் எப்போது என்று சொல்லுங்கள். அதை கேட்க தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து நிர்மலா சீதாராமன், அவரிடம் கடிதம் கேட்டுள்ளார். அப்போது தான் ஏற்கனவே பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். இதனால் சற்று கோபமடைந்த நிர்மலா சீதாராமன், 'சந்தோஷம்' என்று சலித்துக்கொண்டே கூறினார். மேலும் "விஷயத்தை அனைவர் முன்புதான் கூறிவிட்டீர்களே.. லெட்டர் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

இதனால் மேடையிலும் சற்று சலசலப்பு ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சர் முன்பு சாதாரண குடிமகன் தனக்கு கிடைக்க வேண்டிய ஞாயத்தை பேசியதற்கு, ஒன்றிய அமைச்சர் சட்டென்று கோபத்தோடு பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது.

Also Read: காஞ்சி : கட்டுப்பாட்டை இழந்த இரயில்.. தண்டவாளத்தில் இருந்து சுவரை உடைத்து சாலையில் புகுந்ததால் அதிர்ச்சி!