Tamilnadu

வாச்சாத்தி வழக்கு: ”ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” - CPIM விமர்சனம் !

வாச்சாத்தி வழக்கு தொடர்பாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதுகுறித்து பேசிய அவர்,

“1992 ம் ஆண்டு நடந்த வாச்சாத்தியில் வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை சிபிஎம் கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு. இவ்வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்.

இந்த தீர்ப்பிற்காக நீண்ட நெடுங்காலம் காத்திருத்தாலும் வரவேற்பு அளிக்கிறோம். ஏழை பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பை அதிகாரிகள் படிப்பினையாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும்.

வரும் 2-ம் தேதி விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை ஆளுநர் நடத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி ஜெயந்தியன்று மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல. அதிமுக - பாஜக இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி என்னென்ன முறியும் என தெரியவில்லை.

பாஜகவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அவர் அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை காட்டி வருகிறார். 'கோவை எம்.பி.யால் தான் கோவை வளர்ச்சி இல்லாத நகராக மாறிவிட்டது என்றும், அவரால் தொழில் முடங்கியதற்கு காரணம் என்றும்அண்ணாமலை சொல்லியுள்ளார். ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற தகுதியில்லாத அண்ணாமலை அவரை குறை சொல்வது ஏற்புடையது அல்ல.

அகில இந்திய கட்சியான பாஜக, தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவது நியாயமா? பாஜக அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு விரோதமாக செய்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் பந்த் நடத்தப்படும். பாஜக பந்திற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்றுக் கூடியது அல்ல.

நாடு முழுக்க தொழில்கள் முடங்க பாஜகவின் பொருளாதார கொள்கை தான் காரணம். அண்ணாமலை திமுக அரசு மீது இல்லாதது பொல்லாதது சொல்வதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம்.

அதிமுக உடனான கூட்டணி முறிவால் பாஜக நிலைகுலைந்துள்ளதால், அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணியில் இருந்து அதிமுக விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பாஜகவின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா?

பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தில் திமுக உடன் இணைந்துள்ளோம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு அறவே இல்லை. இது கனவுலகில் இருந்து கதை எழுதுவது போல உள்ளது. அதிமுக பாஜகவோடு சேர்ந்தாலும், தனியாக இருந்தாலும் அதிமுகவை எதிர்ப்போம். பாஜகவுடன் இருந்து பிரிந்ததால் அதிமுக நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.

இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். கட்சி கொள்கைக்கு தான் மக்கள் ஓட்டு போட வேண்டும். நேரு முதல் மன்மோகன்சிங் வரை கொள்கைகளை முன்வைத்தே ஓட்டு கேட்டார்கள். ஒரு தனிமனிதருக்கு ஓட்டு கேட்பது நல்லதல்ல. இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தேர்தலுக்கு பிறகும் பிரதமர் வேட்பாளர் பிரச்சனை வராது.

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி திமுக கூட்டணி தான். இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்த ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு மாநில நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும். என்ஐஏ விசாரணை எல்லை தாண்டி செல்கிறது. சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அமலாக்கத் துறை பாஜகவின் இளைஞரணியாக உள்ளது" என்றார்.

Also Read: ”மணிப்பூரில் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்த விஸ்வகுரு”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்