Tamilnadu

“52% உயர் சாதியினருக்கா? பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்னாயிற்று?” : ஆசிரியர் கி.வீரமணி ஆவேச அறிக்கை !

சட்டமன்றங்களிலும், மக்களவைத் தேர்தலிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி பட்டியலின மக்களுக்கு 23%, பிற்படுத்தப்பட்டோருக்கு 25% - மீதி 52% உயர்ஜாதியினருக்கா? பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்னாயிற்று? பச்சைக் கொடிக்கும்- பச்சைப் பாம்புக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்; இது ஒரு ‘கண்ணிவெடி’ - எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்றைய ‘‘டெக்கான் கிரானிக்கல்’’ என்ற ஆங்கில நாளேட்டில் (16.9.2023) ஒரு செய்தி - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் இட ஒதுக்கீடு தரும் ஒரு மசோதாவை, நாளைய மறுநாள் (18.9.2023) நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றிவிட்டு, வரும் பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு சந்திக்க ஆயத்தமாகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

இதற்குமுன் இட ஒதுக்கீட்டை - சமூகநீதியை இதுவரை எதிர்த்து வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு, ‘‘2000 ஆண்டுகளுக்குமேல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்பட, இட ஒதுக்கீடு அவசியம் தேவை’’ என திடீர் என்று ‘ஞானோதயம்‘ ஏற்பட்டு, கூறிய நிலையில், இப்படி ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதாம்!

பொதுத்தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இது வரவேற்கத்தக்கதுதானே என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் தோன்றும். அது ஒரு இடமாறு தோற்றப் பிழை (Parallox error) போன்றதே! இட ஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி., யினருக்குத் தனித்தொகுதி உள்ளது; அவர்களது விகிதாசாரத்தின்படி. ஆனால், ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லை.

இது அரசியல் இட ஒதுக்கீடு! (Political Reservation) ஆனால், கல்வி, உத்தியோகங்களில் - ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள ஒதுக்கீடுபடியே அரசியல் தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 25 சதவிகித ஒதுக்கீடு தருவது என்பதன்மூலம், பொதுத்தொகுதிகளில் அம்மக்களின் பிரதிநிதிகள் கூடுதலாக நின்று வென்று வரும் இன்றைய கண்கூடான யதார்த்த நிலை என்னாகும்?

அதைத் தடுத்து, ஓ.பி.சி.,க்கு 25 சதவிகிதம், எஸ்.சி., எஸ்.டி.,க்கு 23 சதவிகிதம்; ஆக மொத்தம் 48 சதவிகிதம் போக, எஞ்சிய 52 சதவிகித தொகுதிகள் உயர்ஜாதியினருக்கே கிடைக்க இப்படி ஓர் ஏற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகம் சமூகநீதியாளர்களுக்கு வலுவாக ஏற்படுகிறது! அதுமட்டுமல்ல, இப்போதைய தேவை மகளிர் ஒதுக்கீடு - பல ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள அதன் தேவை அவசியம், அவசரம்!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது ஏன்?

அதுபோலவே, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி இட ஒதுக்கீடு - எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி., மக்களுக்கு Adequate - போதுமான அளவீடு கிடைக்காமல், சமூக அநீதி பல ஆண்டுகளாய் இருந்துவரும் நிலையில், அவற்றைத் திசை திருப்ப திடீரென்று இப்படி ஒரு திருப்பிவிடலா?

மேலும் தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு பெறுதலும் முக்கியம். இதுபற்றி தமிழ்நாடு எம்.பி., க்கள் - சமூகநீதி மாநிலங்கள் ஆழமாகப் பரிசீலித்து, புதைந்துள்ள ‘‘கண்ணிவெடி’’களைக் கண்டறியவேண்டும். கடைசி நேரத்தில் போதிய கால அவகாசம் கூட மசோதாக்கள்மீதான விவாதத்திற்குத் தராது, ‘‘அவசரக் கோலம், அள்ளித் தெளிப்பது’’தான் மோடி - ஆர்.எஸ்.எஸ். அரசின் வியூகம் - வித்தையாகும். அரசமைப்புச் சட்டத் திருத்தங்களேகூட ‘ஜெட்’ வேகத்தில் நிறைவேற்றப்பட்டன என்பது நாம் கண்ட நடைமுறை.

எனவே, இதில் உள்ளே உள்ள உண்மையான நோக்கம்பற்றி மசோதாவை ஆழமாக அலசி ஆராய்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழு நீண்ட விவாதம் செய்யவேண்டும்; காரணம், இது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும். இதனை சமூகநீதியாளர்கள் ஆழ்ந்து பரிசீலிக்க முன்வரவேண்டும்.

பச்சைக் கொடியும் - பாம்பும் ஒன்றா?

69 சதவிகித இட ஒதுக்கீட்டை கல்வி, உத்தியோகத் துறையிலும், அதேபோல, அரசியல் தொகுதி ஒதுக்கீடுகளிலும் மிக அதிகம் பெற்றுவரும் தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளுக்குப் பாதகம் ஏற்படுமா? என்பதையும் கூர்ந்து கவனித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கக்கூடாது!

‘‘பச்சை கொடி எது - பச்சைப் பாம்பு எது’’ என்று சரியாக ஆராய்ந்து பார்த்தாக வேண்டிய கடமை உண்மையான சமூகப் போராளிகளுக்கு உண்டு. எனவே, கவனம்! கவனம்!! கவனம்!!!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.186.81 கோடிக்கு சொத்துக்களை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. சிக்கிய ஆவணங்கள் - பின்னணி என்ன?