Tamilnadu

பாக்கெட்டில் ஒரே ஒரு பிஸ்கட் குறைவு.. பிரபல பிஸ்கட் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் !

சென்னையை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் வழக்கமாக அவர் இருக்கும் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சம்பவத்தன்றும் அந்த நாய்களுக்கு உணவளிப்பதற்காக கடையில் இருந்து 'Sunfeast Marie Light' பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கியுள்ளார்.

ITC நிறுவனத்தின் அந்த பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகள் இருப்பதாக விளம்பரப்படுத்திய நிலையில், அதுனுள்ளே 15 பிஸ்கட்டுகள் தான் இருந்துள்ளது. இதையடுத்து அதனை வாங்கிய டெல்லி பாபு, தான் வாங்கிய கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவருக்கு அந்த கடையில் இருந்தவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி சரியாக பதிலளிக்கவில்லை.

இதனால் அந்த நிறுவனத்துக்கே நேரடியாக சென்று இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார் ஆனால் அந்நிறுவன ஊழியர்களோ இவருக்கு முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் டெல்லி பாபு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன்பேரில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகள் இருப்பதாக கூறி 15 பிஸ்கட்டுகள் வைத்து, அந்த பிஸ்கட் நிறுவனம் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினார். மேலும் ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசாவாக இருப்பின், தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டார். தொடர்ந்து இந்த நிறுவனம் ஒரு நாளுக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகிக்கும்போது, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது என்றும், இப்படியே சுமார் ரூ.29 லட்சம் வரை ஏமாற்றி பணம் ஈட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதோடு இதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய ரூ.100 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் டெல்லி பாபு தரப்பில் இருந்து வாதாடப்பட்டது. இதையடுத்து ஐடிசி நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், தங்கள் பிஸ்கட் பாக்கெட் எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல் எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது,

அப்போது அந்த பாக்கெட்டின் எடை 76 கிராம் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற விசாரணையில் பாக்கெட்டில் 74 கிராம் மட்டுமே எடை இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 16 பிஸ்கட்டுகள் இருப்பதாக அறிவித்து 15 பிஸ்கட்டுகள் மட்டுமே பாக்கெட்டுக்குள் வைத்து விற்பனை செய்து வந்த பிஸ்கட் நிறுவனத்தை கண்டித்தது.

மேலும் டெல்லி பாபுவுக்கு பிஸ்கட் பற்றாக்குறைக்கு ரூ.1 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்குமாறு ஐடிசிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு குறைவான எடைகொண்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனையில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால் தொடர்ந்து வழக்கில் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செய்யாத குற்றம்.. 47 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட 72 வயது முதியவர்.. பின்னணி என்ன ?