Tamilnadu
மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.. பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை சுமந்து வந்த இஸ்லாமியர்கள் !
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாலையில் வெங்கடேசபெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்கள் திருக்கல்யாண நிகழ்வுக்கு சீர்வரிசை கொடுக்கும் விதமாக கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்மாலைகள், தேங்காய், வாழைப்பழம், பழங்கள், உப்பு, அரிசி, பருப்பு, நெய், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் தட்டில் வைக்கப்பட்டு வளநாடு முஹைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து திரளான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.
சீர்வரிசை பொருட்களுடன் கோவிலுக்குள் வந்த இஸ்லாமியர்களை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அன்புடன் வரவேற்றனர். பின்னர் சீர்வரிசைப்பொருட்களை வழங்கிய போது அதை பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை கொடுக்கப்பட்டது. சீர்வரிசை வழங்கப்பட்ட பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமாக லட்டு வழங்கியதுடன் ஜமாத்நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
மதங்களை கடந்த மனிதத்தின் வெளிப்பாடாக கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கிய நிகழ்வு அனைவரின் கவனங்களையும் ஈர்த்திருப்பதுடன் மனிதமாண்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் விளங்கி உள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!