Tamilnadu

தோண்டத் தோண்ட தங்கம்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட 3 கிராம் தங்க தாலி!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வில் நூற்றாண்டுகள் பழமையான பொக்கிஷங்கள் கொண்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. கீழடியில் நடைபெறும் 9ஆம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணம் மற்றும் யானை உருவம் பொறித்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், ஆண் உருவச் சுடுமண் பொம்மை, யானைத் தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, சுடுமண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மையான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிராம் எடை கொண்ட இந்த தாலி ஆபரணத்தில் 40 சதவீதம் மட்டுமே தங்கம் கலக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்னோர்கள் நேர்த்தியான முறையில் தங்க ஆபரணத்தை வடிவமைத்துப் பயன்படுத்தி வந்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது என அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து டெண்டர்.. வெளிச்சத்திற்கு வந்த ஒன்றிய அரசின் நாடகம்!