Tamilnadu

ஒரே கடையில் மீண்டும்.. Strawberry ஐஸ்கிரீமில் பல்லி: அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.. சீல் வைத்த அதிகாரிகள்!

திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே 'மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்' என்ற கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பழமையான கதையான இந்த கடை அந்த பகுதியில் மிகவும் பெயர்பெற்ற ஒன்றாக இருக்கிறது. இங்கே ரூ.5 முதல் வகை வகையான ஐஸ்கிரீம்கள் கிடைக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இங்கே ஐஸ்க்ரீம் விரும்பி சாப்பிடுவர்.

இந்த ஐஸ்க்ரீம் கடை மிகவும் பிரபலம் என்பதால் திருச்சியிலே பல்வேறு பகுதிகளில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் மெயின் கார்ட் கேட் பகுதியில் உள்ள கடைக்கு இளம் ஜோடி ஒன்று ஐஸ்க்ரீம் சாப்பிட சென்றுள்ளனர். தங்களுக்கு பிடித்த வகையான ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிடும்போது அதில் பல்லியின் ஒரு பகுதி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கே கடை ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தது மட்டுமின்றி, பல்லி இருந்த ஐஸ்க்ரீமை போட்டோ, வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் கடைக்கு விரைந்தனர்.

அங்கே வந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்ததோடு கடையை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஐஸ்கிரீம் கடையில் உள்ள பிரிட்ஜ் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசும் வகையிலும் இருந்துள்ளது. மேலும் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாரிகள் வருவதற்கு முன்னதாக பிரிட்ஜில் இருக்கும் ஐஸ்க்ரீம் உள்ளிட்டவையை சாக்கடைக்குள் ஊழியர்கள் கொட்டியது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த ஐஸ்க்ரீமில் பல்லி கிடந்தது உண்மை என்றும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஐஸ்கிரீம் கடை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தற்காலிகமாக கடையில் விற்பனையை தடைசெய்து அதிகாரிகள் கடையைப் பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கடை உரிமையாளருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

மேலும் அந்த கடையில் இருந்த ஐஸ்கிரீம் சாம்பிள்ஸ் தமிழ்நாடு அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரபல ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீமில் பல்லி இருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள இந்த கடையின் கிளை ஒன்றில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடையை சோதனை செய்தனர். அப்போது அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சாப்பாடு கம்மியா கொடு..” தாயிடம் அடம்பிடித்த 3 வயது குழந்தை.. விசாரிக்கையில் காத்திருந்த அதிர்ச்சி !