Tamilnadu

இங்கு தொழில் செய்யக் கூடாது.. வெளிநாட்டு நிறுவன மேலாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பிரேசில் நாட்டைச் சேர்ந்த வெக் (WEG) என்ற காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி கொண்ட 4.2 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட காற்றாலையை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளராகப் பிரேசில் நாட்டைச் சார்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாராஸ் (CARLAS HERBERT BARASS) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிறுவனத்தைக் கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி ஒன்றிய அரசின் எரிசக்தித் துறை ரசாயன இணை அமைச்சர் பகவந்த் குப்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்நிறுவனத்தில் கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி முதல் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது .

இந்த நிறுவனத்தில் பா.ஜ.க கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஒப்பந்த அடிப்படையில் சில பணிகளைச் செய்துள்ளார். ஆனால் இவர் சரியாகச் செய்து கொடுக்காததால் இவரது ஒப்பந்தத்தைப் பிரேசில் நாட்டு நிறுவனம் ரத்துசெய்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அவரது மகன் பாலாஜி ஆகியோரின் தூண்டுதல் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை நிறுவனத்திற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

மேலும் அங்கிருந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சார்லஸ் ஹெர்பர்ட் பரோஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் இங்குத் தொழில் பண்ணக்கூடாது என அவரை மிரட்டியுள்ளனர். இது குறித்து பொது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணனின் அவரது மகன் பாலாஜி வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் ஆகியோர் மீது ஏழு பிரிவுகளில் பணகுடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பெற்றோர்களே உஷார்.. வேடிக்கை பார்க்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப பலி!