Tamilnadu

”புத்தகக் கண்காட்சிகள் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்” - அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா - 2023 இன்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, " புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இலக்கிய விழாக்கள்தான் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கப் பயனுள்ளதாக இருக்கும். மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் புத்தகத் திருவிழாக்கள் இருக்க வேண்டும்.

உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற புத்தகத் திருவிழா நடைபெறுவதின் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குத் தயாராவதற்கான புத்தகங்கள், நாவல்கள் , சிறுகதைத் தொகுப்பு நூல்கள், சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த புத்தகத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகச் சிறைத் துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாசகர்கள் பலரும் சிறை கைதிகளுக்காகப் புத்தகங்களைத் தானமாக வழங்கி வருகின்றனர். இந்த புத்தக திருவிழா ஜூலை 24ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

Also Read: ”தமிழ்நாடு அமைதியாக இருப்பது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிடிக்கவில்லை”: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!