Tamilnadu

"ஞாபக மறதியில் சிக்னலைப் பார்க்க மறந்துட்டேன்" -ரயில் ஓட்டுனரின் பதிலால் அதிர்ந்த பயணிகள்.. நடந்தது என்ன?

சென்னையில் நடுத்தரமக்கள் பயணிக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் திகழ்கின்றன. சென்னையை தவிர செங்கல்பட்டு, அரக்கோணம் ,கும்மிடிப்பூண்டி, திருத்தணி போன்ற பகுதிகளுக்கும் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் குறுப்பிட்ட நேர இடைவெளியில் செங்கல்பட்டு, அரக்கோணம் ,கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக தினமும் மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த ரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு திருத்தணிக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் வழக்கமாக புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் இரவு 8.15 மணிக்கு நின்று செல்வது வழக்கம். இதனால் அந்த நிறுத்தத்தில் இறங்கும் பயணிகளும் அதில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், ரயில் புளியமங்கலம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில் நிலையத்தில், சிக்னல் கொடுத்தும் அந்த ரயில் அங்கு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ரயில் அரக்கோணத்தில் நின்ற நிலையில், ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் என்ஜின் பகுதிக்கு சென்று ரயில் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஓட்டுநர், ஞாபக மறதியில் சிக்னலைப் பார்க்காமல் விரைவு மின்சார ரயில் என நினைத்து ரயிலை இயக்கியதாக கூறியது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மற்றும் கார்டு ஆகியோரிடம் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் ரயில் 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Also Read: ராஜஸ்தான் : நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை.. ஒரே மாதத்தில் 4-வது சம்பவம் !