Tamilnadu

தொடரும் தீட்சிதர்கள் பிரச்னை.. சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்கும் அறநிலையத்துறை - அமைச்சர் அதிரடி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய மற்றும் முன்னோடி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர், "10 முதுநிலை திருக்கோயில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், வள்ளலார் நிலையம், பழனி, இருக்கன்குடி, திருவேற்காடு உள்ளிட்ட கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 5 கோவில்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. மருதமலை, சிறுவாபுரி, வயலூரில் ஒளவையாருக்கு மணிமண்டபம், மயிலாப்பூர் கலாச்சார மையம், திருவள்ளுவர் திருக்கோவிலை பிரம்மாண்டப்படுத்தி திருக்கோவில் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீட்சிதர்கள் என்றாலே பிரச்சினை தான், சிதம்பரம் கோவிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி சில தீட்சிதர்கள் செயல்படுகிறார்கள்.

சிதம்பரம் திருக்கோவிலை தணிக்கை மேற்கொள்ள அனுமதி மறுக்கிறார்கள்; விலை உயர்ந்த நகைகள் வரவு வைக்கப்பட்டது குறித்து தெரிவிக்க மறுக்கிறார்கள். இது அவர்களின் சொந்த நிறுவனம் போல் நினைக்கிறார்கள். மக்களின் ஆதரவால் நடக்கும் கோவில் அரசுக்கு தகவல் தரமறுக்கிறார்கள். மற்ற கோவில்களைப் போல் இங்கு ஒரு உண்டியல் கூட இல்லை. பக்தர்களை நீதிமன்ற தீர்ப்பின்படி கனகசபையின் மீது ஏறி வழிபாடு நடத்த நியாயத்தின் படி அனுமதிக்கின்றோம் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம்.

ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத்துறைதான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதனடிப்படையில்ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 286 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது இதுவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு சிலைகள் மீட்கப்பட்டவில்லை

திருடுபோன சிலைகளை மீட்பது மட்டுமல்லாமல் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்கவும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்துசமய அறநிலையத்துறை மீது குற்றம் சொல்ல பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழுக்கு, நிலங்கள் மீட்பு, கிராமபுற கோவில்கள் ஆதிதிராவிடர் பழங்குடினர் பகுதி கோவில்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய ஒரு சிலர் நினைக்கிறார்கள் அது நிச்சயம் நடக்காது. வேண்டுமென்று குற்றம் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எந்த கோவிலுக்கு சென்றாலும் விருப்பப்பட்டு செல்பவர்களுக்கு வேறு ஏதும் அடையாளத்தோடு அல்லாமல் வந்தால் அனுமதிக்கிறோம். அறநிலையத்துறை கோவில்களில் மத அடையாளமின்றி வருபவர்களுக்கு அனுமதி உண்டு" என்றார்.

Also Read: சூடு பிடிக்கும் ஆருத்ரா மோசடி விவகாரம் : RK சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்.. தொடர் சிக்கலில் பாஜக !