Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ரூ.136 கோடி ஊழல்.. அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்!

அ.தி.மு.க ஆட்சியில் ஆயிரத்து 68 கூட்டுறவுச் சங்கங்களில் மட்டும் 136 கோடி ரூபாய் அளவில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க ஆட்சியில் 2015-16 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளில் 1,068 கூட்டுறவுச் சங்கங்களில் மட்டும் 136 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

62 % கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும், 18 % கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 முதல் 2021 மார்ச் வரை 967 கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்த ஊழல் முறைகேடு குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டு வாரியாக எத்தனை கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் எடுத்துள்ளது என்ற பட்டியலையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணைத்து வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

Also Read: “மதவெறி கொண்ட பாஜக-வை வீழ்த்தி கலைஞர் வழியில் நாட்டு நலன் காண்போம்” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்