Tamilnadu

“விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சரும், நானும் துணை நிற்போம்” : உற்சாகப்படுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு போட்டிக்கான லோகோவையும், அதன் சின்னங்களையும், தீம் பாடல்களையும் வெளியிட்டு வெற்றி பெற்ற 1979 மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், கடந்த மார்ச் மாதம் தஞ்சாவூர் வந்திருந்த போது முதலமைச்சர் கோப்பையை தொடங்கி வைத்தேன். தற்போது பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் அமைச்சராக பொறுப்பேற்று முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தான். கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கும் விளையாட்டுப் போட்டியில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதேபோல் கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் மட்டுமல்லாமல், கபடி, சிலம்பம் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டு வருகிறது.

மார்ச்சில் தொடங்கிய முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை மூன்று லட்சத்தி 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை இனி விளையாட்டு போட்டிகளிலும் வரலாறு படைக்கும்.

தேசிய அளவில் பங்குபெறும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், நானும் என்றும் துணை நிற்போம். சென்னையில் 174 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். ஆனால் தஞ்சையில் 180க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னையில் ஸ்குவாஸ் போட்டி, ஒன்பது நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து பங்குபெறும் கடல் அலை சறுக்கு போட்டியும் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளை நடத்துவதால், கேலோ இந்தியா யூத் கேம் விளையாட்டையும் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளோம்.

சர்வதேச விளையாட்டுகளில் பங்கு பெறுவதற்கு விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியிருக்கக் கூடாது என்று தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை அண்மையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

இதன் மூலம் ஏழை எளிய விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கும் தமிழ்நாட்டில் தலைசிறந்த விளையாட்டு கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கும் தயங்காமல் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வீரர்கள் வீராங்கனைகள் வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்தார்.

Also Read: ”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!