Tamilnadu
ஆன்லைனில் வந்த லிங்க்.. நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்த பட்டதாரி இளம்பெண்.. இறுதியில் நேர்ந்த சோகம் !
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் லத்திகா லட்சுமி தம்பதியினர். 29 வயதாகும் லத்திகா ஒரு பி.காம் முடித்த பட்டதாரி ஆவார். இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், லத்திகா வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் இவரது மொபைல் வாட்சப் எண்ணுக்கு மர்ம நபரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
அதில் குறிப்பிட்ட லிங்குகளை அனுப்பி சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. இதனை நிறைவு செய்தால், பார்ட் டைம் வேலை வாங்கி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த டாஸ்க்குகளை நிறைவு செய்தார். தொடர்ந்து அவருக்கு சில யூடியூப் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் நம்பிய அவர், மீண்டும் அவர்கள் கூறியபடியே செய்துள்ளார். தொடர்ந்து டெலிகிராமில் வந்த வேறொரு லிங்க் மூலம் இணைந்து வேலை செய்யும்படி அவர்கள் கூறவே, அதனையும் செய்துள்ளார். அதில் முதலில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறவே, அவரும் அதனை செய்து ரூ. 14 ஆயிரம் பெற்றுள்ளார். தொடர்ந்து ரூ.60 ஆயிரம் முதலீடு செய்து ரூ.90 ஆயிரம் பெற்றார்.
இதையடுத்து, ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வி.ஐ.பி உறுப்பினராக முடியும் எனவும்,ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஒரு புள்ளி அளிக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைக்கும். அந்த மர்ம நபர்கள் கூறினர். இதனை நம்பி லத்திகா லட்சுமி ரூ.22 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் போட்ட பணம் கூட திரும்ப வரவில்லை. மேலும் கொடுத்த பணமும் என்ன ஆனது என்று தெரியவரவில்லை.
இவரும் தொடர்பு கொண்டாலும் அந்த மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து இளம்பெண் லத்திகா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படித்த பட்டதாரி இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் வந்த லிங்கை நம்பி லட்ச கணக்கில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் சைபர் கிரைம் தொடர்பான செய்திகள் தினமும் வெளியாகி வரும் நிலையில், போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!