Tamilnadu
”கலைஞர் என்றாலே கிங் மேக்கர்”.. மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு இருந்து கணக்கிட வேண்டும்' என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல- நிறைவுற்றதற்குப் பின்னாலும் தமிழ்ச்சமுதாயத்துக்காக பயன்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய மாபெரும் தலைவர் தான் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்த கிண்டி பகுதி சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது ஆகும். சைதாப்பேட்டை என்பது, கலைஞர் அவர்கள் நின்று வென்ற தொகுதி ஆகும். சைதாப்பேட்டை வேட்பாளர் - திருவாளர் 11 லட்சம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிவிப்பு செய்தார்கள். எனவே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக - இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கலைஞர் அவர்கள்.
இந்த வளாகத்துக்கு கிங் இன்ஸ்டிடியூட் என்று பெயர்.இதுவும் பொருத்தமானது தான். கலைஞர் என்றாலே கிங் தான்.
அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங் - கிங் மேக்கராக இருந்தவர். அந்த வகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்தில் திறக்கப்படும் மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது மிகமிக பொருத்தமானது. இதனை விடப் பொருத்தமான பெயரும் இருக்க முடியாது.
பதினைந்தே மாதத்தில் ... மறுபடியும் சொல்கிறேன்... பதினைந்தே மாதத்தில்... மறுபடியும் சொல்கிறேன்... பதினைந்து மாதத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனையாகும்.
2015 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு - 2023 ஆம் ஆண்டு வரை இரண்டாவது செங்கலைக் கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில் அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.
மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர்களுக்கும் - மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்குமான வேறுபாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கழக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை அரசாணையாக வெளியிட்டது.
அதில் மிக முக்கியமானது - ‘’தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை’’ அமைக்கப்படும் என்பதாகும். மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி, கிங் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பின்னர் ஆயிரம் என அளவில் உயர்த்தினோம். 2022, மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். அதாவது மொத்தம் 15 மாதத்தில் இந்த மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!