Tamilnadu

இறந்தும் வாழ்வளித்த 20 வயது இளைஞர்.. அரசு மருத்துவமனையில் கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் யானாமாலா ஆனந்த். இளைஞரான இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த விபத்தில் யானாமாலா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யானாமாலா ஆனந்த் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து யானாமாலா ஆனந்த் இதயம், நுரையீரல் எம்.ஜி.எம் மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இரண்டு சிறுநீரகங்கள் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் மியாட் மற்றும் அப்போலோ மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

மகன் இறந்தாலும் மற்றவர்கள் மூலம் வாழ்கிறார் என யானாமாலா ஆனந்த் பெற்றோர் கண்கலங்கப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க மாற்றுத்திறனாளியுடன் வந்த பெண்