Tamilnadu

“அந்த செய்திகள் முழுக்க முழுக்க கற்பனையே..”: போலி செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு திமுக MLA கண்டனம்!

தான் கூறாத கருத்தை பேசியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசோக்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “செய்திகளை திரித்துக் கூறும் பத்திரிகைகளை பார்த்துள்ளேன். ஆனால் சொல்லாத கருத்துக்களையே செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளை இப்போதுதான் பார்க்கிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று (மே 27) தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

எங்களினுடைய மாவட்டக் கழக செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய கூட்டம் தான் அந்த பொது உறுப்பினர்கள் கூட்டம். அதனால் உரிமையோடு நாங்கள் பேசிக் கொள்வது இயல்பு. அந்த உணர்வோடு தான் அந்தக் கூட்டம் நடந்தேறியது.

அப்போது எங்கள் அமைச்சரிடத்தில், எங்கள் பகுதிகளில் செயல்படுத்த உள்ள அரசுத் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் முறையாக அரசு அலுவலர்கள் தெரிவிப்பது இல்லை என்பதை குற்றச்சாட்டாக அல்லாமல், அவரது கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் மேடையில் குறிப்பிட்டேன். அங்கு நடந்தது இவ்வளவு தான்.

ஆனால், தினமலர் உள்ளிட்ட சில பத்திரிகைகள் தாங்கள் என்ன நடக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அதை எழுதி உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகைகளின் செய்தியாளரும், பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்த அந்த அரங்கில் இல்லை. இதில் இருந்தே செய்தியாக வந்த அனைத்து கதைகளும், முழுக்க முழுக்க கற்பனை என்பதை உறுதியாகிறது.

குறைந்தபட்சம் அந்த செய்திக்கு கீழ், "இது யார் மனதையும் புண்படுத்த அல்ல; முழுக்க முழுக்க கற்பனையே" என்றாவது பொறுப்பு துறப்பாவது போட்டிருக்கலாம். ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தெளிவுபடுத்தி இருந்தார்கள். சம்பந்தப்பட்ட நானும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “சரித்திரம் எழுதி, சாதனை படைத்து, சகாப்தமாக வாழ்கிறார் கலைஞர்”: தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டி புகழாரம்!