Tamilnadu
கோகுல்ராஜ் உள்ளிட்ட 8 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை.. தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்தார் கோகுல்ராஜ். மேலும் உடலில் காயங்களுடன், அவரின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இது ஆணவக் கொலை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஆண்டு இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. பின்னர் யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பு, 5 பேர் விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் சித்ரா தரப்பும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர். 2022 நவம்பரில் இந்த வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை ஆஜராக உத்தரவிட்டு அவரிடம் விசாரணை நடத்திய மதுரை கிளை, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
பின்னர், நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின் மேல் முறையீட்டு வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், 2023 பிப்ரவரியில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. கோகுல்ராஜ், சுவாதியுடன் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இவர்கள் 8 பேருக்கும் எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 5 ஆண்டுகளாக குறைத்தும் தீர்ப்பளித்தனர்.
மேலும், மதுரை நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
தலைமறைவாக இருந்த யுவராஜ், ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற செய்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும், கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற யுவராஜ் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், எதிர்காலங்களில் குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதிகள், தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?