Tamilnadu
ரூ.2000 நோட்டுகளை மாற்ற கமிஷன்.. ரூ 30 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது !
நாடு முழுவதும் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி கும்பல் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து உள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (32). கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் இவர், தன்னிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆள் தேடியுள்ளார். அப்போது திருப்பூர் பொங்குபாளையம் காளம்பாளையம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சபரிநாதன் (30) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
எனவே சபரிநாதனிடம் சென்று, தன்னிடம் உள்ள 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நாடுகளாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு 10% கமிஷன் தருவதாகும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சபரிநாதனும் 500 ரூபாய் நோட்டுகளை ரெடி செய்துள்ளார். பின்னர் அதை ஜெயராமனிடம் கூறியபோது, அவர் பெருமாநல்லூரில் உள்ள அதிமுக பிரமுகர் சந்திரசேகர் வீட்டுக்கு வர சொல்லியிருக்கிறார்.
எனவே ஜெயராமனும், பைனான்சியர் சபரிநாதனும் ரூ.30 லட்சத்துக்கான 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதிமுக பிரமுகரான சந்திரசேகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சந்திரசேகர் மற்றும் கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொருளாளரான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (36), ஜெயராமனிடம் இருந்து அந்த ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் சென்ற அவர்கள் வேறு வழியாக, ஜெயராமன் மற்றும் சிவராமன் ஆகிய இருவரும் காரில் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். இதனிடையே வெளியே காத்திருந்த சபரிநாதன், நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததை உணர்ந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டதை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சபரிநாதன் இது குறித்து 3 பேர் மீதும் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் ஹேமலதா, மோசடி செய்து காரில் தப்பியோடி தலைமறைவான ஜெயராமன் மற்றும் சிவராமன் ஆகியோரை மதுரை அருகே வைத்தும், அதிமுக பிரமுகரான சந்திரசேகரை அவரது வீட்டில் வைத்தும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த ரூ. 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், தப்பியோட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஊத்துக்குளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!