Tamilnadu

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி தந்தை - மகன் பலி.. விடுமுறையை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம்!

திருப்பூர் மாவட்டம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு நந்த கிஷோர் என்ற மகனும், கன்னிகா என்ற மகளும் உள்ளனர். இதில் மகன் நந்த கிஷோர் கருமத்தம் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மகள் கன்னிகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பள்ளி கோடை விடுமுறையை என்பதால் ரமேஷ் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன், சகோதரி லதா ஆகிய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரணாம்பாளையம் அணைக்கட்டுக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது, ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகளைக் குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அருகில் உள்ள கருவேலம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ரமேஷ்குமார் மற்றும் அவரது மகன் நந்த கிஷோர் இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளனர்.

இதில் இருவருக்கும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்து அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருவரையும் சடலமாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் கண்முன்னே தந்தை மற்றும் மகன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!