Tamilnadu

நீலகிரி TO விழுப்புரம்: 5 ஊர்களில் 6 திருமணம்.. பணம்,நகைகளை சுருட்டி ஏமாற்றி வந்த பெண் பிடிபட்டது எப்படி?

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி 17 வயது, 16 வயதில் 2 மகன்களும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு உண்ணார் பாலகிருஷ்ணன் உடல்நலமின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மகாலட்சுமியின் உறவினர் ஒருவர் அவரது பிள்ளைகளை கூட்டி சென்றதால், தனியே வசித்து வந்த மகாலட்சுமி, ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்ட 6 மாதங்களிலேயே அவருடன் வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

தொடர்ந்து சில நாட்கள் கழித்து ஊட்டியை பெயின்டர் மணி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் நன்கு பழகி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த நிலையில், வெறும் 3 மாதங்களிலே அவரிடம் இருந்த பணம் நகைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து மீண்டும் சில மாத காலம் கழித்து, முகநூல் மூலம் ஏமாற்ற தொடங்கியுள்ளார். அதன்படி 4-வதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அருள் என்பவருடன் பழகி, தனக்கு யாரும் இல்லை என்று அனுதாபம் பெற்று அவரையும் தனது காதல் வலையில் விழச்செய்து திருமணம் செய்துகொண்டுள்ளார். வழக்கம்போல் அவருடனும் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு, பணம், நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அருள், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இதனிடையே மகாலட்சுமி மீண்டும் 5வதாக விழுப்புரம் மாவட்டம் சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை ஏமாற்ற எண்ணியுள்ளார்.

அவரது முகநூல் பக்கம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி திருமணம் செய்துகொண்டுள்ளார். மகாலட்சுமி, தனக்கு யாரும் இல்லை என்று கூறியதால், மணிகண்டன் குடும்பத்தினர் அவருக்கு 8 சவரன் நகைகளை போட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தனர். இந்த சூழலில் அவரிடம் தான் ஊருக்கு செல்வதாக கூறி டிசம்பர் மாதம் சென்றுள்ளார்.

ஊருக்கு சென்ற மனைவி, மணிகண்டனை தொடர்பு கொள்ளவே இல்லை. இவர் போன் செய்தாலும் அதனை எடுக்கவில்லை. அப்போது தான் வீட்டில் இருந்த 1 லட்ச ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் மகாலட்சுமி மீது சந்தேகம் கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக மகாலட்சுமிக்கு போன் செய்த மணிகண்டனை, கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார் மகாலட்சுமி. இதையடுத்து இதுகுறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கடந்த 5 மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மகாலட்சுமி சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் மகாலட்சுமியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ச்சியாக திருமணம் செய்து ஏமாற்றி வந்த மகாலட்சுமி என்ற பெண்ணை போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொந்த மகளுக்கு விஷம் கொடுத்து கொலை.. தந்தை செய்த கொடூர காரியத்தின் பகீர் பின்னணி என்ன?