Tamilnadu

“கவனம் ஈர்க்கும் களப்பணியாளர்..”: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள TRB.ராஜாவின் அரசியல் பயணம் - முழு விவரம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக புதிதாக அறிவிக்கப்பட்ட, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவின் அரசியல் பயணம்

1976ஆம் ஆண்டு ஜூலை 12ல் அப்போதைய தஞ்சை மாவட்டமும், தற்போதைய திருவாரூர் மாவட்டமுமான தளிக்கோட்டையில் பிறந்தவர் டி.ஆர்.பி.ராஜா.

இயற்கை ஆர்வலரும் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான இவர் 2011ஆம் ஆண்டு, முதல் முறையாக மன்னார்குடி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 2016ஆண்டு ஆண்டிலும் 2021ஆம் ஆண்டிலும் மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். முத்தமிழறிஞர் கலைஞரால் மன்னார்குடி தொகுதியின் "செல்லப்பிள்ளை" என அழைக்கப்பட்ட இவர், அதிமுகவின் அதிகார பீடமாக விளங்கிய மன்னார்குடியை தொடர் வெற்றி மூலம் தன்வசப்படுத்தியவர்.

திட்டக் குழு, சட்டமன்ற பொதுக் கணக்கு குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். 2021ஆம் ஆண்டில் திமுக வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2022 முதல் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை தற்போது வகித்து வருகிறார்.

பொது மக்கள் பயன்பெறும் வகையில் மன்னார்குடிக்கு ரயில் சேவை, வடுவூர் உள் விளையாட்டு அரங்கம், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம், டிஜிட்டல் நூலகம், நீச்சல் குளத்துடன் நவீன உடற்பயிற்சி கூடம், நீர் நிலை மேம்பாடு, மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு போக்குவரத்து, ராஜகோபால சுவாமி ஆலய புதுப்பிப்பு என பல்வேறு திட்டங்களை குறுகிய காலத்தில் கொண்டு செயல்படுத்தியவர்.

மொத்தத்தில் கவனம் ஈர்க்கும் களப்பணியாளர் என தொகுதி மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் டிஆர்பி ராஜா.

Also Read: “என் பணியை திறம்பட செய்வேன்..” : அமைச்சராக பொறுப்பேற்ற TRB.ராஜாவின் முதல் பேட்டி - நெகிழ்ச்சி சம்பவம்!