Tamilnadu

'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி': 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும், “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் 10 மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளையும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் 5 பயனாளிகளுக்கு கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்குதல்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வாயிலாக தமிழ்நாடு அரசு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயனளித்துவரும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் தற்போது 34,62,092 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திருப்போர் பட்டியலிலுள்ள 64,098 நபர்கள் மற்றும் புதியதாக 35,902 நபர்கள், என மொத்தம் 1,00,000 நபர்களுக்கு வரும் மாதம் முதல் மாதம் ரூ.1,000/- உதவித்தொகை பெறும் வகையில் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500/-) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி ஒரு லட்சம் நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் விளிம்பு நிலையிலுள்ள ஒரு இலட்சம் ஏழை எளிய நபர்கள் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த ஒரு இலட்சம் பயனாளிகளும் வரும் மாதம் முதல் உதவித்தொகையினை பெறத்துவங்குவார்கள்.

“புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் (Debit Card) வழங்குதல்

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில்

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்ட “புதுமைப் பெண்” திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,210 மாணவிகளும், 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் மூலம் மேலும் 94,507 மாணவிகளும், என மொத்தம் 2,10,717 மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்காக இதுவரை மொத்தம் 121.18 கோடி ரூபாய் மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் 10 மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஆணைகள் வழங்குதல் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில் துறையின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க "நான் முதல்வன்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.3.2022 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2022-23ஆம் ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவுகளுடன் சேர்த்து மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே நான் முதல்வன் திட்டம் ஆகும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் பிரத்தியேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத் திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 பொறியியல் கல்லூரிகளில் 4,98,972 மாணவர்களும், 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,11,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.

இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பினை பெற்று தருவதற்கான முகாம்கள் கல்லூரி வளாகங்களிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொறியியல் கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு, Siemens, Dassalt, Microsoft, IBM, Cisco Autodesk போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் L &T, TCS, Infosys, NSE போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 59,132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதிவரை நடைபெறவுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62,634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஜுன் மாத இறுதிவரை நடைபெறவுள்ளது.

மேலும், CII, TIDCO, SIPCOT, MSME, ELCOT, DISH. Employment, StartupTN, Guidance TN, FICCI, NASSCOM போன்ற அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்தவர்களில் 5 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.

Also Read: சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!