Tamilnadu

“IT ரெய்டுக்கு அஞ்சவில்லை.. அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஷ்ரா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி-யில் சேர முயற்சித்து வாய்ப்பு கிடைக்காததால் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து மக்களுக்காக பணியாற்றினேன். அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றதற்கு வாழ்த்துகள். ராணுவம், காவல்துறையினர் போல் பேரிடர் காலங்களில் நாட்டு நலப்பணி திட்ட இளைஞர் மேற்கொண்டதற்கு நன்றி.

மருத்துவமனைகளில் ரத்த தானம் தேவைப்பட்டால் முதலில் உதவ முன் வருவதும் நாட்டு நாலப்பணித்திட்ட மாணவர்கள் தான். சமூகத்திற்கு ஆக்கப்பூர்வாம உதவிகள், விழிப்புணர்வு, சமூக அமைப்புகளை சரி செய்யும் பணிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நலப்பணி திட்டத்திற்கு நிதி ஆதாரம் உயர்த்தி தர கோரிக்கை விடப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட பேரணிக்கு செல்ல விமானம் மூலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு நலப்பணி திட்டத்தில் பணியாற்றி வரும் மாணவர்கள் சமூக சேவை செய்யும் அதே நேரத்தில் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்க முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார்.

ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. அண்ணாமலை குறித்து பா.ஜ.க குறித்தும் வெளியான ஆடியோவிற்கு என்ன விளக்கம் அளித்தார்கள். அது குறித்து செய்தியாளர்கள் என்ன கேள்வி எழுப்பினீர்கள்.

ஐ.டி. ரெய்டுகளால் தி.மு.க அஞ்சவில்லை. தி.மு.க-வை ஒருபோதும் யாராலும் அச்சுறுத்த முடியாது. நேற்று கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Also Read: “கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ஜூன் 5ல் திறப்பு” : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !