Tamilnadu

தெரு ஓரத்தில் உணவின்றி உயிருக்கு போராடிய மூதாட்டி.. மீட்டு மருத்துவமனையில் சேர்த்த SP: குவியும் பாராட்டு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாயாண்டி தெருவில் மூதாட்டி ஒருவர் தெருவில் படுத்து கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த எஸ்பி சீனிவாச பெருமாள் மூதாட்டியை மீட்டார். அவரிடம் விசாரிக்கையில் உணவு எதுவுமின்றி பசியில் வாடி போயிருந்தது தெரியவந்தது.

மேலும் தெருவில் சுருண்டு கிடந்த அந்த மூதாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்த போலிசார், பசியுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த மூதாட்டியை மீட்டனர்.

மேலும் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்ற SP, மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

மேலும் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு உதவிக்காக பெண் காவலர் ஒருவரையும் நியமித்து உத்தரவிட்டார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட எஸ்பி கூறுகையில், "இந்த மூதாட்டி குறித்து எனக்கு பிரத்யேக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை பார்க்க வந்தேன். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று உடல் நலம் தேறியவுடன் முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூதாட்டியை காண எஸ்பி வருகையில் அவருக்கு மாற்று உடையும், சாப்பிட பழங்களும் வாங்கி கொண்டு போயுள்ளார். ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி பற்றி தகவல் கிடைத்தவுடன், அவரை மீட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த எஸ்பியின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுபோல் வயது முதிர்ந்தவர்கள் யாரேனும் சாலையில் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

Also Read: அத்துமீறிய Rapido ஓட்டுநர்.. ஓடும் பைக்கில் இருந்து குதித்துத் தப்பிய இளம் பெண்: CCTV காட்சி!