Tamilnadu

“Meeshoல இருந்து பேசுறோம்.. Car பரிசா விழுந்துருக்கு”: நம்பி 4 லட்சம் ஏமாந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரவணன் (32) ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிக்கடி பொருட்கள் வாங்குவதாக தெரிகிறது.

இந்த சூழலில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசுகையில் தாங்கள் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான MEESHO-வில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் ஒரு பிரம்மாண்ட பரிசான மகேந்திரா XUV 700 கார் விழுந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்னர் சிறிது பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். காருக்கு ஆசைபட்ட சரவணனும், சரி என்று கூற Google Pay மூலம் தவணை முறையில் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி என்பவர்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறு சரவணன் சுமார் 4,50,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து பணத்தை அனுப்பி ஒரு வாரம் கழித்து சரவணன், தன்னை தொடர்பு கொண்ட அனைத்து மொபைல் எண்ணுக்கு அழைத்தார். ஆனால் அந்த செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த சரவணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் தீராத மன உளைச்சலில் இருந்த சரவணன், தான் குடிக்கும் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் ஏமாற்று வேலையில் மக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் பலமுறை எச்சரித்தும், விழிப்புணர்வு செய்தும் மக்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் பேராசை பட்டு பணத்தை இழக்கின்றனர். மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: Online-ல் பொருள் வாங்கும் மக்களே.. இராணுவ வீரர்கள், CRPF பெயரில் மோசடி: எச்சரிக்கும் புதுவை சைபர் கிரைம்!