Tamilnadu

விளையாடும்போது விபரீதம்: 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளர்களின் 2 வயது மகன்.. சோகத்தில் கிராமம்!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த காசிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (25). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்னலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சிவா என்ற 2 வயது, நிதிஷ் என்ற 3 வயது ஆண் குழந்தைகளும், மித்ரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

ராஜா - அன்னலட்சுமி தம்பதியினர், பூத்துறை கிராமத்தில் புதுச்சேரியை சேர்ந்த சாய்ராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தங்கி, அதனை பராமரித்து வருகின்றனர். இந்த சூழலில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றிருக்க, ஆண் குழந்தைகள் இருவரும் தோப்பில் விளையாடிக்கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரத்திலேயே தாய் அன்னலட்சுமி குழந்தைகளை தேடி பார்க்கையில், அதில் 2 வயது குழந்தையை காணவில்லை.

இது குறித்து தனது கணவர் ராஜாவுக்கு தெரிவித்த, மனைவி பின்னர் 2 பேரும் அங்கும் இங்கும் தேடி அழைந்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை என்பதால் கிணற்றினுள் விழுந்திருப்பானோ என்ற சந்தேகத்தில் தந்தை ராஜா அதில் குதித்து தேடினார். ஆனால் அப்போதும் குழந்தை கிடைக்கவில்லை என்பதால் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் குதித்து தீவிரமாக தேடினர். அப்போது நீண்ட மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவனின் சடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. சிறுவனின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து காவல் அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி ஆழ கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்த கூலி தொழிலாளர்களின் 2 வயது சிறுவன், கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. அண்மையில் கூட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயது குழந்தை இருந்துள்ளது. அதோடு சில மாதங்களுக்கு முன்னர் பாத்ரூம் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 1 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக காக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இறந்ததாக பிணவறைக்கு மாற்றப்பட்ட தேர்தல் அதிகாரி.. உறவினர்கள் வந்ததும் தெரியவந்த உண்மை.. நடந்தது என்ன ?