Tamilnadu
கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு.. முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசுகையில், “ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பவுத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும் போது - அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும்.
அதன் மூலமாகத் தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த - அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பது நமது நிலைப்பாடு ஆகும்.
அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு ஆகும். இதனை தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன.
சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார். பின்னர் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, மதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து பேசி, தீர்மானத்தையும் வரவேற்றனர்.
பாஜகவினர் தவிர்த்து பேரவையில் இருந்த மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்த நிலையில், முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!