Tamilnadu
கலைஞர் நூற்றாண்டு விழா.. பேரவையில் 3 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அது என்ன?
முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படி தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-
பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிற கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை அறிவிப்பதில், உங்களோடு சேர்ந்து நானும் ஓரளவிற்கு மகிழ்ச்சி அடைந்து, அவற்றை அறிவிக்கிறேன்.
முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூபாய் 25 ஆயிரம் என்பது, ரூபாய் 30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்.
அதேபோல், தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500/- என்பது, மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அதேபோல், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாய் என்பது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்து, அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!