Tamilnadu
“உரிமைகளை தர மறுப்பது சரியல்ல.. சமூகநீதி சமநீதியாக வழங்கப்பட வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பவுத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது.
வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும் போது - அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத் தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த - அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பது நமது நிலைப்பாடு ஆகும்.
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் அவர்களால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. இத்தகைய ஜாதி என்பது நீ வேறு - நான் வேறு என்பது மாதிரி இல்லாமல் - நான் உயர்ந்தவன் - நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது.
அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல் - செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ - அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம் தான் சமூகநீதித் தத்துவம் ஆகும். இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் ஆகும்.
அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு ஆகும். இதனை தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை - வெளிநாடுகளில் சென்று உயர் கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை - உயர் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். அரசியலமைப்பு ( பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950 இன் படி இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது.
ஆனால் 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களையும் - 1990 ஆம் ஆண்டு பவுத்த மத்தைப் பின்பற்றுபவர்களையும் - பட்டியல் சாதியினராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தம் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்துள்ளார்கள்.
* ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் -
*மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும்-
*மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் - தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் அவர்கள் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து - அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!