Tamilnadu

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. பரிசோதனையை அதிகரிக்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?

கொரோனா பாதிப்பு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று கொரோனா தடுப்பு முறைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பேசினார்.

இதில், கோவையில் இருந்து தமிழ்நாடு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் 10, 11 தேதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாக் டிரைல் நடத்தப்படவுள்ளது. இதில், மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்வார்கள். பொது சுகாதார துறை அமைப்பின் மூலம் கொரோனா குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 1000 படுக்கைகளும், அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. தவிர, 24, 061 ஆக்ஸிஜன், 2067 மெட்ரிக் டன் ஆக்சிசன் சேமிப்பு அமைப்பு உள்ளது. மேலும் நூறு சதவீதம் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா ஆர்டிபிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, தமிழகத்தில் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கிளாஸ்டர் பாதிப்பு இல்லை. எனவே, பொது மக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்த நபருக்கு இணை நோய் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் உயிரிழந்தார். மேலும், நாள்பட்ட சர்க்கரை பாதிப்பு , ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, இதய நோயாளிகள் ஆகியோர் பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். நாடு முழுவதும்

முக கவசம் கட்டாயமில்லை என்ற நிலை இருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 1 முதல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து மருத்துவமனையில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2-ம் தேதி ஆய்வு செய்த போது அங்கு 100 சதவீதம் பேர் மாஸ்க் அணிந்து இருந்தனர். மேலும்,

மருத்துவ கட்டமைப்பு குறித்து கேட்டு வருகிறோம். தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் , கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். அவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்து வருகிறோம். கொரோனா பாதித்தவர்கள் 5-6 நாள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் அறிவுறுத்தப்படும்.

சிறப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!