Tamilnadu
”தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாகப் பொருள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த பேச்சு மக்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் இன்று பேசியபோது, நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து அந்த சட்டம் நிறைவேற்றப்பட கூடாது என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித்தனமானது
தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக நீடிப்பதற்கான அருகதை அற்றவர். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும், செயலில் ஆளுனர் ஈடுபட்டுள்ளார்.
ஆளுனர் தான் வசிக்கும் மிக உயரிய பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவதற்கு மாறாக, உயர்ந்தபட்ச பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது அவர் ஓர் பொறுப்பற்ற மனிதர் என்பது வெளிப்படையாகியுள்ளது.
அத்துமீறி செயல்படும் ஆளுனரை திரும்ப பெற வேண்டும். ஆளுனரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!