Tamilnadu

உயிரோடு இருக்கும் பாம்பை கடித்து துப்பிய இளைஞர்கள்.. மாஸாக வீடியோ வெளியிட்ட 3 பேரை தட்டி தூக்கிய போலிஸ் !

பொதுவாக சமூக வலைதளங்களில் மாஸ் காட்ட வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் பல காரியங்கள் செய்து வருகின்றனர். சாகசம் என்ற பெயரில் பைக்கில் வீலிங் செய்வது, உயரமான இடங்களில் இருந்து செல்பி எடுத்துக்கொள்வது, ஆபத்தான பகுதியில் இருந்து எதையாவது செய்வது உள்ளிட்டவைகளை செய்கின்றனர்.

இதுபோன்ற செய்கைகள் சில நேரத்தில் அவர்களுக்கே வினையாக முடிகிறது. அதோடு இதனால் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அரங்கேறியுள்ளது. சும்மா சென்ற பாம்பை சாகசம் செய்வதாக கூறி பிடித்து, வாயால் கடித்து துப்பி வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது சின்னகைனூர் என்ற கிராமம். இங்கு மோகன் (33), சூர்யா (21) மற்றும் சந்தோஷ் (21) ஆகிய இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று பெரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதோடு இவர்கள் அனைவரும் சேர்ந்து அடிக்கடி எதாவது வம்பு செய்தும் வந்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி இவர்கள் 3 பெரும் அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்துள்ளனர். அப்போது அங்கே ஒரு தண்ணீர் பாம்பு சென்றுள்ளது. இதனை கண்ட அவர்கள் உடனே அதனை பிடித்து விளையாடியுள்ளனர். அதோடு அதனை எதாவது புதிதாக செய்யவும் எண்ணியுள்ளனர்.

அதன்படி உயிரோடு இருக்கும் அந்த தண்ணீர் பாம்பை அதில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய வாயால் அதனை கடித்து துண்டாக்கியுள்ளனர். இவர் கடிப்பதை அருகில் இருந்த நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் இதனை தங்கள் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். வீடியோ வெளியாகி பலரது கண்டங்களை பெற்ற நிலையில் வைரலானது.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், விலங்கு பிரியர்களும் வன்மையாக கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு கிடைக்கப்பட்ட தகவலின்பேரில், அந்த வீடியோவில் இருக்கும் மூன்று பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலிசார் அவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் இராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

உயிரோடு இருக்கும் தண்ணீர் பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர் வனத்துறையினர்.

Also Read: காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த Wedding Gift: ஹோம் தியேட்டரை Play செய்தபோது மணமகனுக்கு நடந்த விபரீதம்!