Tamilnadu

“தற்குறித்தனத்தின் உச்சம்; பேரறிஞர் அண்ணாவை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை”: கடுமையாக சாடிய முரசொலி!

தற்குறித்தனத்தின் உச்சம்!

தற்குறித்தனத்தின் உச்சத்தில் இருக்கும் பழனிசாமி, தத்துவம் எல்லாம் உதிர்க்கத் தொடங்கி இருக்கிறார். சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, சசிகலாவின் காலை வாரி விட்டு பதவியைத் தக்க வைத்துக் கொண்ட துரோகசாமி அவர். அந்தக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியே இறுதியானது. உறுதியானது. அதனை மாற்றி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் போட்டுக் கொண்டவர் பழனிசாமி.

ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று பொதுக் குழு கூடி தீர்மானம் போட்டதும் இந்த பழனிசாமிதான். 'நானே பொதுச்செயலாளர்' என்று தீர்மானம் போட்டுக் கொண்டவரும் பழனிசாமி. 'ஒரு கட்சி நடக்க வேண்டுமானால் பொதுக்குழு கூட வேண்டும்' என்ற ஒற்றை வாதத்தை வைத்து மீண்டும் பொதுச்செயலாளராக ஆகி இருக்கிறார் பழனிசாமி.

தகுதியற்ற மனிதர் பொதுச் செயலாளராக இருந்தால் என்ன? ஒருங்கிணைப்பாளராக இருந்தால் என்ன? தோற்கும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருந்தால் என்ன? ஒருங்கிணைப்பாளராக இருந்தால் என்ன?

தனது துரோகத்தின் சம்பளமாக கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு வாய்மூடிக் கிடப்பதை விட்டுவிட்டு, தி.மு.க.வை சீண்டிப் பார்த்துள்ளார் பழனிசாமி. "பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையைத் தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்" என்று சொல்லி இருக்கிறார் அந்த தற்குறி.

அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளராக இருந்தார் எம்.ஜி.ஆர். அவர் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் ஆன ஜானகி யார்? எம்.ஜி.ஆரின் மனைவிதானே? இது பிறப்பின் அடிப்படையிலான தலைமையல்லாமல் வேறு என்ன? அதன்பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக ஆனது எப்படி? எம்.ஜி.ஆருடன் 18 படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பதால்தானே? எம்.ஜி.ஆர். இறந்தபோது, 'உடன்கட்டை ஏறலாமா என்று யோசித்தேன்' என்று சொன்னவர் அல்லவா ஜெயலலிதா? இது பிறப்பின் அடிப்படையில்தானே?

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக பழனிசாமி ஏற்றுக் கொண்டாரே? 'எனது உடன்பிறவா சகோதரி' என்று ஜெயலலிதா சொன்னதை விட வேறு தகுதி உண்டா? டி.டி.வி.தினகரனுக்கு வாக்கு கேட்டார்களே? எந்தத் தகுதியின் அடிப்படையில்? பிறப்பினால் வந்த பந்தம்தானே? அ.தி.மு.க.வின் 1972 முதல் இன்று வரை அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாத தற்குறியால்தான் இப்படி எல்லாம் பேச முடியும்?

'பிறப்பின் அடிப்படையில் டெண்டர் விட்டு' மாட்டிக் கொண்டவர்தான் இந்த பழனிசாமி என்பதை நாடு அறியும். பழனிசாமி மீது ஒரு வழக்கு நடக்கிறது. தனது உறவினர்களுக்கு கோடிக்கணக்கில் டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. “உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?' என்று நிருபர்கள் அவரிடம் கேட்டார்கள். ”யார் மீது தான் ஊழல் புகார் இல்லை” என்றார் பழனிசாமி. அத்தகைய யோக்கியவான்தான் பழனிசாமி. பொதுப்பணி, நெடுஞ்சாலையைத் தானே வைத்துக் கொண்டார் பழனிசாமி. அவர் மீதான 4,800 கோடி டெண்டர் ஊழல் வழக்காக அது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இதுகுறித்து பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார். இப்போதல்ல 2018 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்தார். தனது உறவினர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்களைக் கொடுத்தார் என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. இதன் மூலம் பழனிச்சாமி, தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக விசாரணையில் இருந்து தப்பி வந்தார் பழனிசாமி. இப்போது உச்சநீதிமன்றம், 'சென்னை உயர்நீதிமன்றமே இதனை விசாரிக்கட்டும்' என்று சொல்லி விட்டது. எந்த நேரமும் இந்த வழக்கு விசாரணைக்கு வரலாம்.

முன்பு இதனை விசாரித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா, “பொது வாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடைப் பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். அதிக அதிகாரம் கொண்டுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும்போது அது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் தன்னிடம் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையை நடவடிக்கை எடுக்கத் தடை போட்டு தப்பி வந்தவர் தான் பழனிசாமி.

இவர்தான் 'பிறப்பின் அடிப்படை' என்று தத்துவம் எல்லாம் பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவைப் பற்றிப் பேசுவதற்கான எந்த அருகதையும் அவருக்கு இல்லை. சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடித்து வளர்ந்த பழனிசாமி தனது அறிக்கையில் பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்வது அண்ணாவுக்கே இழுக்கு ஆகும். அண்ணாவின் கொள்கைக்குத் துரோகம் இழைப்பதே அ.தி.மு.க. என்பதை மக்கள் அறிவார்கள்.

Also Read: “அச்சுறுத்தும் வெறுப்பு பேச்சுகள், நீதிமன்றக் கட்டடங்களையும் விட்டு வைக்கவில்லை..” - முரசொலி வேதனை !