Tamilnadu

“நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” : வீண் அரசியல் செய்யும் வீணர்களுக்கு உதயநிதி தரமான பதிலடி !

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு முடிவெடுத்து அதற்கான பணியை தொடங்கியது. அப்போது டெல்டா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர், அப்போதிருந்த அதிமுக அரசுக்கு எதிராகவும் போராட்டம் எழுந்தது.

பின்னர் திமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டுப்போராட்டத்திற்கு பிறகு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இயற்கையை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க அரசு டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது.

இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான குடவாசல் பஞ்சநதிகுளம் பகுதியில் தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி ராஜா, மாரிமுத்து , தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தளயாமங்களம் பாலு மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் பேச உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சுரங்கங்கள் அமைக்க அனுமதி கிடையாது என கூறிய அவர், சுரங்கங்களை தடை செய்ய முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்றும், இது குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்துவார் எனவும் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டமும் முதலமைச்சரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தி.மு.க அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய எந்த செயலிலும் அரசு ஈடுபடாது எனவும், விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Also Read: “அருவருப்பான வெறுப்பு அரசியலை சிலர் செய்கிறார்கள்” : இளைஞர்களுக்கு அமைச்சர் உதயநிதி சொன்ன அட்வைஸ்!