Tamilnadu

வீட்டுமனை வரைபடத்துக்கு ரூ.15,000 லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய அதிமுக ஊராட்சிமன்ற தலைவரின் பதவி பறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது ஐயங்கார் குளம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் இருந்து வந்தார். இந்த சூழலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐயங்கார் குளத்தில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். எனவே வீட்டுமனை வாங்கி அதற்கான வரைபடம் கேட்டு அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு விண்ணப்பித்துள்ளார்.

வேண்டா சுந்தரமூர்த்தி

ஆனால் அந்த தலைவரோ அவருக்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி தலைவரஇடம் கேட்டுள்ளார். அப்போது அவரோ அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சமாக 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கிருஷ்ணமூர்த்தியிடம் தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் வேறு வழியில்லாத கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் இரகசிய திட்டம் தீட்டினர். அதன்படி புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயன தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்தனர். மேலும் அங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாறுவேடத்திலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அந்த பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியிடம் கொடுக்க முற்பட்டபோது, அதனை ஊராட்சி செயலர் புவனாவிடம் கொடுத்தார். அப்போது அங்கே இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்கள் இருவரையும் தக்க ஆதாரங்களுடன் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது பதவியை பறிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் பதவியை பறிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த ஐயங்கார் குளம் ஊராட்சி தலைவராக இருந்த வேண்டா சுந்தரமூர்த்தியின் பதவி பறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Also Read: “ஆண் நண்பர்களை ஏவி, தன் மீது ஆசிட் வீச சொன்ன பெண்” : போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் !