Tamilnadu

மெரினா கடற்கரையில் கல்விக் கட்டணத்திற்காக வயலின் வாசித்த மாணவர்.. உடனே உதவி செய்த சென்னை போலிஸ்!

சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர்கல்வி படிப்பிற்குக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் எனக் கூறி ஜிபே நம்பரை ஒரு அட்டையில் வைத்து, வயலின் வாசித்துக் கொண்டே உதவிக்கொண்டுள்ளார். இவரின் இந்த செயல் கடற்கரைக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த மாணவருக்குப் பலரும் ஜி பே பணம் செலுத்தி அவரது படிப்பிற்கு உதவி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர் மெரினாவிற்குச் சென்று வயலின் வாசித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, காரப்பாக்கம் கே.சி.ஜி பொறியியல் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு ஏரோஸ்பேஸ் படித்து வரும் அஜித் என்பது தெரியவந்தது. மேலும் இவர் வேலூரில் அரசுப் பள்ளியில் படித்து, மெக்கானிக்கல் படிப்பில் டிப்ளமோ முடித்துவிட்டு கவுன்சிலிங் மூலமாக நேரடியாக பி.இ இரண்டாம் ஆண்டு ஏரோஸ்பேஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவரது பெற்றோர்கள் கயிறு தரிக்கும் வேலை செய்து வருகின்றனர். இதனால் தன் படிப்பிற்கான செலவைப் பெற்றோரிடம் கேட்காமல் தானே சமாளித்துக் கொள்ள நினைத்துள்ளார். பைலட்டாக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் இருக்கும் கல்லூரி மாணவன் அஜித், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்லூரி கட்டணம் கட்டுவதற்காகச் சென்னை மெரினா கடற்கரையில் வயலின் வாசித்துக் கொண்டு உதவி கேட்டது, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கட்டணம் செலுத்த முடிவு செய்து வயலின் வாசித்து உதவி கேட்டடது தெரியவந்தது.

பின்னர் அஜித்தின் லட்சியத்தை உணர்ந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் அவரது செலவுக்காக ரூ. 2000 கொடுத்தார். அதோடு, தொண்டு நிறுவனம் மூலமாக மாணவனின் கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கும் நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

பிறகு உதவி ஆணையர் பாஸ்கர் மாணவரின் செல்போன் எண்ணைக் கேட்டபோது, அவரது , செல்போன் பழுதாகி இருப்பது தெரியவந்தது. இதனை எடுத்து செல்போனையும் சரி செய்ய உதவி ஆணையர் உதவியுள்ளார். தனது படிப்பிற்கு உதவிய, உதவி ஆணையருக்கு அஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

மாணவரின் மேற்படிப்பிற்கு உதவி செய்த உதவி ஆணையர் பாஸ்கருக்குப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்.. உலகச்சாதனை படைத்த ரொனால்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !